"Each Individual can make a difference. If each of us does,
all we can collectively, we can make a difference",
Hon'ble Kofi Annan, Former Secretary General of United Nations.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்...
எங்கேனும் ஆட்டோக்களின் பின்புறமாக அல்லது அரசு நடத்தும் மரம் நடுவிழாக்களில் பேனரில் பார்க்கப்படும் வார்த்தை. நம் நாட்டில் கோஷங்களுக்கு குறைவில்லைதான்.
ஒரு விழா என்றால் கூட்டம் இருக்கும், சிறப்பு அழைப்பாளர்கள் இருப்பார், சில மணிநேரங்கள் பேசிவிட்டு, பேசியதைக் கேட்டுவிட்டு அந்த நிமிடத்தோடு பேசிய கருத்துக்களை மனதில் பதிந்து கொள்ளாமல் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிடுகிறோம்.
மரக்கன்று நடும்விழா முடிந்து, சில நாட்கள் கழித்து யாருமே கவனிக்க இல்லாமல் தவிக்கும் அனாதையாய் அந்த மரக்கன்று ஆகிவிடும். பொதுமக்களில் பலர், அரசு பார்த்துக்கொள்ளும், நமக்கென்ன வேலை என்று, அலட்சியம் செய்கின்றனர். ஆனால், உள்ளூரில் நிரந்தரமாக வசித்துவரும் நாம் ,நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாத்து வைத்துக்கொள்ளும் உரிமை நம்மைவிட யாருக்கு உள்ளது?
மரங்கள் மனித வாழ்வில் பிரிக்கமுடியாத பந்தத்தை கொண்டுள்ளது. மனித சமுதாயத்தின் அத்துணை தேவைகளையும் மரங்கள் பூர்த்தி செய்கிறது. ஆனால், மனிதன் தனது குறுகிய எண்ணங்களின் வெளிப்பாட்டால் அல்லது பணத்தேவைகளின் நெருக்கடியால், மரங்களை கொன்று குவிக்கும் (வெட்டிச்சாய்க்கும் என்ற வார்த்தையைவிட ) மோசமான முடிவுகளை கைக்கொள்கிறான்.
ஒருபக்கம், மரங்கள் அடங்கிய காடுகளை அழித்தும், விளைநிலங்களை தரிசு நிலங்களாக செயற்கையாக மாற்றி வீட்டு மனைகளாக மாற்றியும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பேரில் தொழிற்சாலைகள் உருவாக்கியும், அல்லது, இந்த பகுதி இப்படியெல்லாம் முன்னேறும், அப்போது நிலத்தை விற்றால், கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையும், இன்னபிற காரணிகளும் மரங்கள், நிலங்கள் அழிப்பிற்கு துணைசெய்கின்றன.
விளைவு, காற்றில் கார்பன் அளவு கூடி, முடிவாக ஓசோன் மண்டலம் என்று சொல்லப்படும் வளிமண்டல அடுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம், கிராமங்களில், பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து பாடல்கள் கேட்பர், சத்தம் தாங்கமுடியாமல் யாரேனும் கேட்பார்களேயானால், இது என் வீடு,நான் அப்படித்தான் கேட்பேன் என்றுதான் பதில்வரும், அதேபோல், ஒரு நாடு தன் இஷ்டம் போல தன்னிச்சையாக செய்துவிட முடியாது என்கிற கால சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம், அதன்விளைவு, அதன் பாதிப்பு மற்ற நாட்டையும் பாதிக்கும் என்பதே அது.
(தொடரும்)
No comments:
Post a Comment