தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்)... இந்த வார்த்தை இன்று இந்திய அளவில் நமது பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்களால் வெளியிடப்பட்டு திரையுலகினரின் ஆதரவுடன் இந்திய மக்களை நோக்கி தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. மிக்க சந்தோஷமே!
மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாக, மகாத்மா காந்தியடிகளின் கனவுத்திட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது, அரசின் கைகளில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் அனைவரின் உள்ளங்களிலும் ஒலிக்க வேண்டும். ஒரு கை ஓசை சத்தமாக இருக்கமுடியாது. நல்ல சுத்தம், நல்ல சுகாதாரம் நன்மையையே வெளிப்படுத்தும். நமது சுற்றுப்புறத்தை எவ்வளவு தூய்மையாக பராமரிக்கிறோமோ அந்த அளவுக்கு, நல்ல காற்று, நல்ல உடல்நலம் என்பதை எவரும் அனுபவிக்கமுடியும்.
சுற்றுப்புறம் என்பது நமது குடியிருப்பு பகுதிகளை மட்டும் உள்ளடக்கியது அல்ல, நாம் பயணிக்கும் இடங்களையும் கொண்டதாகும். ஒரு வீட்டை, ஒரு அலுவலகத்தை, ஒரு வியாபார தலத்தை என்று ஒவ்வொருவரும் தூய்மையாக வைத்திருத்தல் எவ்வளவு அவசியம் என்பதை இக்காலத்தில் பெருகிவரும் நோய்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், நாம் கற்றுக்கொண்ட பாடமென்ன?
தமிழகம் எங்கும் பரவலாக, குறிப்பாக மருத்துவமனைகள் முக்கிய கிராமங்கள் தோறும் இருக்கின்றதோ இல்லையோ, டாஸ்மாக் கடைகளுக்கு பஞ்சமில்லை. அங்கு தினசரி, பயன்படுத்திவிட்டு எறியப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில் மூடிகள், கடலை மிட்டாய் பாக்கெட்டுகள், ஊறுகாய் பாக்கெட்டுகள் என அனைத்தும், பிளாஸ்டிக் மயம் தானே. இவையனைத்தும் உரிய நேரத்தில், அகற்றப்படுகின்றனவா, சுத்தம் செய்யப்படுகின்றனவா? என்பதை உரியவர்கள் கவனித்து செயல்படவேண்டும்.
மற்றும், பேருந்து நிலையங்களை பற்றி கொஞ்சம் நினைப்போம். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்கள் முதல் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய பேருந்து நிலையங்கள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி தூய்மை என்றால் என்ன என்று கேட்குமளவு காட்சியளிக்கின்றன. இந்த பேருந்து நிலையங்களை பராமரிக்க பணியாளர்கள், மேற்பார்வை அதிகாரிகள் என்று எத்தனை எத்தனையோ பேர்கள். ஆனால், என்ன செய்வது.
ஊழியர்களைக் கேட்டால், பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என்றுதான் பதில்வரும். பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களில் சிலர் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெடுகளை குடித்தும் சாப்பிட்ட உணவுபொருட்களின் மீதியை சாலைகளில் வீசியெறிவதும், சிலர் வெற்றிலைப்பாக்கு எச்சிலை சாலைகளில் துப்புவதும் நின்றபாடில்லை.
கிராமங்களில் ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அவற்றின் சார்பில், பெயரளவில்,சிமெண்ட் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும், உரிய நேரத்தில் குப்பைகள் அகற்றப்படுவதுமில்லை. தனிதனி இல்லங்களில் வசிக்கும் பொதுமக்களும் குப்பைகளை தரம் பிரித்து நிர்வகிப்பதுமில்லை.
எனவே, முறையான தூய்மையை முறையாகப் பராமரிப்பது தொடர்பான அரசு மற்றும் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு இருந்தால்தான் தூய்மை இந்தியா சாத்தியம் என்கிற நிலையில், முடிந்தவரை அனைத்து பிரிவினரும் தூய்மையின் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதை அவசியம் உணர்ந்தும், பொறுப்பை உணர்ந்தும் செயல்படவேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் தூய்மை இந்தியா-ஐ பரிசளித்து மகிழ்வோம்!
No comments:
Post a Comment