சாதிகள் மறப்போம், காலகாலமாக பல தேசியத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பேசிவருகின்ற ஒரு வார்த்தை. ஆனால், இந்த வார்த்தை எவ்வளவு பலம் மிக்கது என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!
எவ்வளவு பலம், எவ்வளவு பலவீனம்.... 2020ல் இந்தியா வல்லரசு என்று நாம் அனைவரும் உரக்க பேசிவருகிறோம். ஆனால், ஒவ்வொருவரின் உதடுகளிருந்து மட்டும்தான் இந்த வாசகம் வருகிறதே தவிர, ஆழ்மனதில் இருந்து வருகின்றதா... என்றால் இல்லை என்பது எனது கருத்து.
நான் இந்தியன், நான் இந்தியன் என்று ஒரு மாநிலத்து மக்கள் மட்டுமே குரல் கொடுத்தால் போதாது, அனைத்து மாநிலத்தவரும் நான் இந்தியன், நமக்கு இந்தியா என்று ஓங்கி சொல்லிடல் வேண்டும். ஆனால், நடப்பதென்ன...
நாம் ஊரையே உலகமாக பார்க்கிறோம். தெருவை தேசமாகப் பார்க்கிறோம். உண்மையில், தகவல் புரட்சியினால் உலகமே ஊர்களாய் ஆகிவிட்டது.
அட்லாண்டிக்,ஆர்க்டிக் போன்ற பனிமலை சூழ்ந்த பகுதிகளில் வெப்பம் அதிகமாகி கடல்மட்டம் உயர்ந்து, அதனால், கடற்கரை நகரங்கள், கிராமங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது என்று அறிவியலார் தெரிவிக்கும் இந்த சூழ்நிலையிலும், சாதி என்ற அரக்கனை நாம் பற்றிக்கொண்டு, பாமரன் முதல் நன்கு படித்தவன் வரை உரக்க பேசி வருகிறோம். வெட்கக்கேடு!
இந்த உலகைக் காப்பாற்ற வேண்டுமா? நம் சாதியைக் காப்பாற்ற வேண்டுமா?
நம் முன்னோர்கள் வாழ்ந்தனர், நாம் வாழ்கிறோம், நம் சந்ததி வாழவேண்டும் அல்லவா?
நம் சந்ததிகள் வாழ நல்ல குடிநீர், நல்ல காற்று, நல்ல வானம் , நல்ல சுகாதாரம் இன்னும் பலப்பல நல்ல, நல்ல,,வைகளை நாம் விட்டுச செல்ல வேண்டுமே தவிர, பிஞ்சுக்களின் மனதில், சாதி எனும் நஞ்சை அல்ல.
இளைய தலைமுறை சாதிக்கப் பிறந்ததே தவிர சா(தீ)யை பரவச் செய்ய அல்ல என்பதை உணரவேண்டும்.
சாதியை வைத்து அரசியல் செய்வோர், இளைஞர்கள் மனதில் எப்பேர்பட்ட கொடும் விஷத்தை பதியம் போடுகிறார்களென்பது இப்போது தெரியாது.
எரிமலை ஒரே நாளில் வெடித்திடுமா என்ன?
ஆனால், எப்போது சாதி எனும் தீக்குழம்பு மானுட வாழ்வியலை பொசுக்கிவிட்டு கைக்கொட்டி சிரிக்கும் என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஏற்றத்தாழ்வுகள் அற்ற, அனைவரும் சமம் என்ற நிலை என்று வருகிறதோ அதற்கும் பின்னர்தான், இந்தியா வல்லரசு எனும் கனவு நனவாகும் என்பது உண்மை.
எனவே, சாதிகள் மறப்போம். சாதியின் பெயரால், மானுடத்தை பொசுக்கும் அரக்கனை ஒழிப்போம்!
No comments:
Post a Comment