Monday, 11 August 2014

NRI Welfare

நான் முதலில் செய்ய விரும்புவது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வுக்கான முயற்சிகள். 

இன்று, இந்தியா பொருளாதார அளவில் சிறந்து விளங்குகிறது என்று பெருமைப்பட சொல்கின்ற நிலையில் , பல காரணிகளில் ஒன்று நம் உடன்பிறப்புக்கள் பலரும் வெளிநாடுகளில் பணிபுரிந்து தமது உழைப்பின் பலனை அந்நிய செலாவணி எனும் போர்வையில் இந்தியாவுக்கு அனுப்புவதும் என்றால் அது மிகையாகாது. 

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று சொல்வதைப் போல, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், கிராமங்களில், நகரங்களில் பலர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், சௌதி அரேபியா, மஸ்கட், கத்தார், அபுதாபி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, புருனே, பஹ்ரைன், மாலத்தீவு, இலண்டன், ஜெர்மன், பிரான்ஸ் என பலப்பல  நாடுகளில் பணியாற்றுகின்றனர். இவற்றுள் குறிப்பாக, ஒரு சில நாடுகளில், இந்தியாவின் நட்பு நாடுகள் என்று சொல்லப்படுகின்றவற்றில் கூட நியாயமான சம்பளம், ஓய்வு, சுகாதாரமான இருப்பிடம், மருத்துவ வசதி, உணவு, விடுப்பு ஆகியன அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கின்றது என்று யாரேனும் சொல்வார்களென்றால், அது ஊழலாகத் தான் இருக்கமுடியுமே தவிர, பேச்சு அளவில்தான் இருக்கமுடியுமே தவிர, பேப்பர் அளவில்தான் இருக்கமுடியுமே தவிர உண்மையில்லை. 

உறவுகளைப் பிரிந்து, பெற்றவர்களைப் பிரிந்து, குழந்தைகளைப் பிரிந்து, மனைவியைப் பிரிந்து தனக்கென்று சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார அளவில் நிம்மதியான வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்ற நோக்கில், எத்தனை இளைஞர்கள் கனவுகளை மனதில் சுமந்துகொண்டு, இந்த வருடம், அடுத்த வருடமாவது... என்று துயரங்களை மனதிலும், உடலிலும் சுமந்துகொண்டு சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, ஓவர்டைம் பணத்தை உணவுக்கும், சொந்தங்களோடு கலந்துரையாடியாவது துயரங்கள் தள்ளிவைப்போம் என்ற வகையில், போன் பில்களுக்கும் செலவு செய்து நாட்களை நகர்த்தும் இந்த எதிர்கால இந்தியன் எத்தனை ஏச்சுக்களுக்கும், பேச்சுக்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகின்றான் என்று எவரேனும் பார்த்திடத் தயாரா?

இந்தியாவில் எல்லாவற்றுக்கும் ஆட்களுண்டு, ஆனால், பலன்?

வெளிநாடு வாழ் இந்தியர் அனைவரும், சிரமங்களில் தான் வாழ்கின்றனர் என்று சொல்லிவிடமுடியாது, எமது அறக்கட்டளை கவலைப்படுவதெல்லாம், எவரெல்லாம், தொல்லைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளாகின்றனரோ, அவர்களுக்காக, பாடுபடவேண்டும் , உரிய சலுகைகளைப் பெற்றுத்தரவேண்டும், நமக்காக ஒரு நிர்வாகம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பது தான் எங்களது அறக்கட்டளையின் நோக்கங்களில், குறிக்கோள்களில், திட்டங்களில் ஒன்று.

(தொடரும்) 

No comments:

Post a Comment