Monday, 15 September 2014

Religious and Communal Unity

சமூக நல்லிணக்கம்...

நமது இந்தியா மட்டுமல்ல, உலகமே வசப்படவேண்டிய ஒரு வார்த்தை, சமூக நல்லிணக்கம். இன்றைய தேதியில், உலகமே  மதம், சாதி, வகுப்பு, மொழி, நிறம், மாநிலம் என பலப்பல பிரிவினைகளால் சிதறுண்டு கிடக்கிறது. 

இந்த பிரிவினைகள் வன்முறைகளாகி, கிளர்ச்சிகளாகி, போராட்டமாகி, அவ்வளவு ஏன், போர்புரியும் அளவுக்கு மனித குலத்தை இழுத்துச் செல்கிறது. 

விளைவு, தாயை, தந்தையை, கணவனை, மகளை, மகனை, குழந்தைகளை, சிறிதுசிறிதாக சேர்த்துவைத்த சொத்துக்களை, பார்த்துபார்த்து கட்டிவைத்த வீடுகளை, பசியாற்றும் விளைநிலங்களை, செல்லப்பிராணிகளை என எதையும் விட்டுவைப்பதில்லை.

இதற்கெல்லாம் காரணம், தனிநபர்களின் பேராசை, அதிகார பேராசை, மதம் என்ற பெயரால், இனம், மொழி, நிறம் என்ற பெயரால், இந்த உலகம் அழித்தொழிக்கும் அடாவடி செயல்களுக்கு ஆட்படுத்தப்படுகிறது. 

நாமெல்லாம் மனிதர்கள் தானே, ஆறறிவு கொண்ட விலங்கினங்கள் எல்லாம், அவசியமின்றி, எதையும் செய்வதில்லை. மனிதகுலம் மட்டும் தான் சுயநலங்களுக்காக தன்  இனத்தையே பிரிவினையால் அழித்துக் கொள்(ல்)கிறது.

ஒருபக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி , மறுபக்கம் குண்டுமழை பொழிகிறது. இந்த உலகில் பிறந்த அத்தனை மனிதர்களுக்கும் தோலின் நிறம் மாறிப்போகலாம். இரத்தத்தின் நிறம் மாறுவதில்லையே. உறுப்புகள் இடம் மாறியா இருக்கிறது?

மதம் என்னும் மாயம், செய்யும் மாயம் இந்த உலகத்தை அழித்தொழிக்கும் ஆயுதமாய் ஆகிப்போனதுதான் அவலம்... 

இன்று 15/09/2014, செய்தித் தாள்களில், இங்கிலந்தைச்  சேர்ந்த ஒரு தொண்டு நிறுவன ஊழியர், ஐஎஸ்ஐஎஸ் எனும் தீவிரவாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டு, அதை மனிதாபிமானமற்ற முறையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்டுள்ளது எவ்வளவு கல்நெஞ்சம் கொண்டோரையும் கலங்கடித்துவிடும். என்ன கொடுமை!

புராண கதைகளில்தான் ராட்சசன், அரக்கன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த 2014ல் கூடவா? இதற்கெல்லாம் மதம் போதிக்கும் சித்தாந்தங்கள் தன காரணம் என்றால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்வேன்.

எந்த மதமும், ஹிம்சையை போதிக்கவில்லை. மற்றவர்களுக்கு உதவுங்கள், மற்றவர்களின் உரிமைகளை மதியுங்கள், அன்பு கட்டுங்கள், பசி போக்குங்கள், மற்றவர் துன்பங்களை தம் துன்பமாக எண்ணி முடிந்தவரை ஆதரவு கட்டுங்கள் என்கிற பானியில் தான் அனைத்து மதங்களும் சொல்கின்றன.

ஆனால், மதம் என்ற போர்வையில், தனி மனிதர்கள் சிலரின் தீய எண்ணங்கள், போதனைகளாக, மதிப்பூட்டப்பட்ட மந்திர வார்த்தைகளாக செவிகளில் ஏற்றி சிந்தனையை மாற்றி, சக மனிதர்களுக்கு துன்பங்களை உருவாக்கிவிடும் அளவுக்கு ஆக்கப்படும் நிலையே உள்ளது.

உண்மையான பக்திகொண்டவன் ஒருபோதும் முரடனாகவோ, தீவிரவாதியாகவோ ஆவதில்லை. நிறைந்த குடம் எதுவாகிலும் தளும்புவதில்லை. அரை குடம் தளும்பத்தான் செய்யும்.

பொது அமைதிக்கு இடையூறு செய்யும் எந்த மதத்தை சார்ந்தவரும், ஒன்றை நினைவில் கொள்ளுதல் அவசியம். தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும், மதத்திற்கும், இப்படியான தீவிரவாத செயல்கள் மூலம் நன்மை செய்திட முடியாது. ஆனால், பல தலைமுறைகளையும் தாண்டி வாழும் அவரவர் மக்களுக்கு, மாற்ற முடியாத தீவிர கேடுகளையும், மற்ற சமுதாய, மதம் சார்ந்தவர்களின் வெறுப்பையும் ஒரு தவறையும் செய்யாத தன் தலைமுறைக்கு பரிசாக விட்டுச் செல்கிறார்கள் என்பதே அது.

அடிபட்ட நாகம் பழிக்கு பழி வாங்காமல், மாலையா சூட்டி மகிழும்?

இந்த பரந்த பூவுலகில் எவரும் தனித்து வாழ முடியுமா, என்ன? ஒரு மனிதன் மற்ற மனிதனை சார்ந்து, ஒரு நாடு மற்ற நாட்டை தேவைகளுக்காக சார்ந்துதான் வாழ்ந்தாக முடியுமே தவிர, தனித்து வாழுதல் வாய்ப்பில்லாத ஒன்று.

இயற்கை சீற்றங்களான சுனாமி, வெள்ளம், பஞ்சம், சூறைக்காற்று, நிலநடுக்கம், பூகம்பம், அமில மழை... இன்னும் என்னென்ன நிகழுமோ? அப்படியான காலசூழலில் நாம் அனைவரும் சாதி மறந்து, மதம் மறந்து, வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து, ஒன்றாய் சேர்ந்து இயற்கையின் முரட்டுப் பிடிகளில் இருந்து எப்படி தப்பித்து வாழவேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய தருணத்தில், இன்னமும் சாதியத்தையும் மதவாதத்தையும் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுதல் என்ன நியாயம்?

எனக்கு ஒரு யோசனை! ஒரு மதம் சார்ந்த மக்கள், தலைவர்கள் , மற்ற மதம் சார்ந்த பெரியவர்கள், மகான்கள் ஆகியோரின் ஜீவகருணை போதனைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

ஏசு கிறிஸ்து குறித்து பேசுவோர் வள்ளலாரின், நபிகள் நாயகத்தின்  போதனைகளையும், வள்ளலார் குறித்து பேசுவோர் ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம் போதித்தவைகளையும் இந்த புதிய தலைமுறை சமுதாயத்திற்கு உரிய முறையில் எடுத்துரைப்பார்களேயானால்,  ஒரு மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

அஃது மத நல்லிணக்கத்தை நிச்சயம் உண்டாக்கும். அதன்வழி, சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment